Aug 5, 2008

விழிப்படலங்கள் - அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம்,


பத்து மாதங்களுக்கு முன்பு Canon PowerShot A430 4.0 Mega Pixels நிழற்படக்கருவியை மறுவிற்பனையில் மலேசிய ரிங்கிட் 180 வெள்ளிக்கு வாங்கினேன். இதுவே நான் வாங்கிய முதல் டிஜிட்டல் நிழற்படக் கருவி. அச்சமயம் 10 Mega Pixels நிழற்படக்கருவிகள் சந்தையில் வந்துவிட்டாலும், அப்போதைய சூழ்நிலையில் என்னால் 4.0 Mega Pixels நிழற்படக்கருவியை, அதுவும் மறுவிற்பனையில் இருந்ததைத்தான் வாங்க முடிந்தது. ஆரம்பத்தில், முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காகவே இந்நிழற்படக்கருவியைப் பயன்படுத்தி வந்தேன். பிக்னிக், சுற்றுலா, திருவிழா என ஒரு குறுகிய வட்டத்திற்குள் என் நிழற்படக்கருவியுடன் உலா வந்தேன்.


நாளாக நாளாக இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பதில் நாட்டம் சென்றது. நான் புகைப்படக்கலையில் பெரிய நிபுணன் என்றெல்லாம் சொல்லி விடமுடியாது. ஏதோ கண்ணில் படும் இயற்கைக் காட்சிகளை என் நிழற்படக்கருவியில் பதிவு செய்துக் கொள்வேன். ஏழு மாதங்களுக்கு முன்பு Sony Ericsson k850i Cyber Shot 5.0 Mega pixels கைப்பேசியை வாங்கினேன். அக்கைப்பேசி பதிவு செய்யும் நிழற்படங்களும் நல்ல தரமானவையாக இருக்கின்றன. இக்கைப்பேசியில் பிடிக்கப்பட்டப் படங்களை GPRS வழி நேரே வலைத்தளத்தில் பதிவு செய்யும் வசதியும் (Mobile Blogging) உண்டு. இனிவரும் காலங்களில் நான் பிடித்த, பிடிக்கப்போகும் படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு, குறை நிறைகளையும், சில நுணுக்கங்களையும் வாசகர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். அதோடு இணையத்தில் எனக்கு அகப்படும் சிறந்த புகைப்படங்களையும் இவ்வலைத்தளத்தில் வெளியிடலாம் என நினைக்கிறேன்.

உங்களின் கருத்துகள் எனக்கு மிகப் பயனாக இருக்கும் என நம்பி, விடைப்பெறுகிறேன்.

வணக்கம்.

சித்தனின்.. ©Template Blogger Green by Dicas Blogger.

TOPO